தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம்; அபிசித்தர் 2 வது இடம்!

என்.சன்னாசி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக கருப்பாயூரணி கார்த்திக் வெற்றி பெற்றார். 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி அபிசித்தர் 2 வது இடத்தை பிடித்தார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல்வர் வழங்கிய கார், ரூ. 3 லட்சம் ரொக்க பரிசு மற்றும் கூடுதலாக பசுமாடு கன்று வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தி அபிசித்தர் 2 வது இடத்தை பிடித்தார். இவருக்கு பைக் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பரிசையும் முதல்வர் வழங்கினர். 11 காளைகளை அடக்கி 3 வது இடம் பிடித்த பாசிங்காபுரம் ஸ்ரீதருக்கு மின்சார பைக், ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த காளைகளுக்கான முதலிடத்தை புதுக்கோட்டை கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம். பாபு என்பவரின் காளை பிடித்துள்ளது. இவருக்கு பரிசாக டிராக்டர் மற்றும் பசுமாடு கன்று வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழரசன் என்பவரின் காளை 2வது இடமும், 3வது இடத்தை மேட்டுபட்டி கென்னடியின் காளையும் பிடித்துள்ளன. இவர்களுக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். ஆட்சியர் பிரவீன்குமார், எஸ்.பி அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரசு வேலை என்ற முதல்வரின் அறிவிப்பை என் மூலமாக நிறைவேற்றவேண்டும்: அரசு வேலை என்ற முதல்வரின் அறிவிப்பை என் மூலம் நிறைவேற்ற வேண்டும் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த வீரரருக்கான முதல் பரிசு பெற்ற கார்த்திக் கூறினார்.

இந்த ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற்ற கார்த்திக் கூறுகையில், “ஜல்லிக்கட்டில் சிறந்த வீரரருக்கு கால்நடைத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி.

மாடுகளை பிடிக்க எனது நண்பர்கள், அண்ணன்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தனர். அவர்களுக்கு என் வெற்றியை சமர்பிக்கிறேன். மாடுபிடி போட்டியில் சில இடையூறு இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் செயல் பட்டேன்.

ஏற்கெனவே பரிசுகள் பெற்ற இடங்களில் அரசு வேலை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தற்போது, திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. எனக்கு தந்தை இல்லை. முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக எனக்கு அரசு வேலை வழங்கவேண்டும் , ’ என்றார்.

சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்ற புதுக்கோட்டை ஏவிஎம்.பாபு கூறுகையில், “கடந்த 40 ஆண்டாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறேன். சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை என்ற அறிவிப்பு போன்று, ஜல்லிக்கட்டு காளைகளை பாதுகாக்க காளைகள் நல வாரியம் ஏற்படுத்தவேண்டும். நான் ஏற்கெனவே பிள்ளை போன்று வளர்த்த மாணிக்கம் என்ற 20 வயது காளை சமீபத்தில் உயிரிழந்தது. இதன் நினைவாக நரசிம்மா என்ற பெயரில் வளர்த்த காளை அலங்காநல்லூரில் சிறந்த காளைக்கான பரிசை பெற்று தந்துள்ளது பெருமை” என்றார்.

SCROLL FOR NEXT