திருச்சி: டெல்லியில் செப்.1-ல் ‘பத்லாவ்’ என்கிற பெயரில் மாற்றத்துக்கான பேரணியை நடத்த உள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின கொடியை ஏற்றிய அமர்ஜித் கவுர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நமது நாட்டின் சுதந்திரம், மதச்சார்பின்மை, இறையாண்மை தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
போராட்டம் நடத்தவும், நமது குரலை எழுப்புவதற்குமான அடிப்படை உரிமைகளும், நாட்டின் ஒற்றுமையும் நெருக்கடியில் உள்ளன. சுதந்திர தின உரையில் தன்னைத் தானே பிரதமர் மோடி புகழ்ந்துகொண்டார். அவர் கூறும் பல்வேறு சாதனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக அனைத்துத் தரப்பு மக்களும், ஜென் சீ, ஜென் ஆல்பா தலைமுறையினரும் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
நமக்கு மாற்றம் தேவை. எனவே, ‘பத்லாவ்’ என்கிற பெயரில் நாங்கள் மாற்றத்துக்கான பேரணியை செப்.1-ல் டெல்லியில் நடத்த உள்ளோம். புதிய சுவாசத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதுதான் இதன் நோக்கம் என்றார்.