தமிழகம்

போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஏஐடியுசி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வெற்​றிப் பயணத் திட்​டத்தை வரவேற்​கிறோம், இதனால் போக்​கு​வரத்​துக் கழகங்​களின் வரு​வாய் இழப்பை தமிழக அரசு முழு​மை​யாக ஈடு செய்ய வேண்​டும் என ஏஐடி​யுசி வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து ​சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ரா.ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களில் வரும் அக்​.2-ம் தேதி முதல் வெற்​றிப் பயணம் திட்​டத்​தின் கீழ் மகளிர் கட்​ட​ணமின்றி பயணம் செய்​யும் வசதி விரிவுபடுத்​தப்​படும் என முதல்​வர் அறி​வித்​துள்​ளதை தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களின் தொழிலா​ளர்​கள் சம்​மேளனம் ஏஐடி​யுசி வரவேற்​கிறது.

மகளிரின் பொருளா​தா​ரச் சுமையை குறைத்​து, அவர்​களின் கல்​வி, வேலை​வாய்ப்பு மற்​றும் அன்​றாட பயணத்​துக்கு உதவும் வகை​யில் செயல்​படுத்​தப்​படும் இத்​தகைய சமூக நலத் திட்​டங்​கள் தொடர்ந்து நடை​முறை​யில் இருக்க வேண்​டும் என்​ப​தில் எங்​களுக்கு எந்த மாற்​றுக் கருத்​தும் இல்​லை.

ஆனால், இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​வ​தால் அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் இழப்பை தமிழக அரசு உடனடி​யாக​வும் முழு​மை​யாக​வும் ஈடு செய்ய வேண்​டும்.

தற்​போதைய உத்​தேச மதிப்​பீட்​டின்​படி, இத்​திட்​டத்​துக்​காக ஆண்​டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செல​வாகும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், சுமார் 10 ஆயிரம் நகரப் பேருந்​துகளில் ஒரு பேருந்​துக்கு சராசரி​யாக நாளொன்​றுக்கு ரூ.5 ஆயிரம் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டால், மாதத்​துக்கு சுமார் ரூ.1,500 கோடி​யும், ஆண்​டுக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி​யும் வரு​வாய் இழப்பு ஏற்​படும் நிலை உரு​வாகும்.

எனவே, திட்​டத்​துக்​கான நிதி ஒதுக்​கீடு, உண்​மை​யில் அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் இழப்பை முழு​மை​யாக ஈடு செய்ய வேண்​டும்.

கடந்த ஆட்​சிக் காலத்​தில் செயல்​படுத்​தப்​பட்ட ‘விடியல் பயணம்’ திட்​டத்​தின் கீழ் சாதாரண நகரப் பேருந்​துகளில் மகளிர் கட்​ட​ணமின்றி பயணம் செய்​வதற்​காக பட்​ஜெட்​டில் சுமார் ரூ.3,200 கோடி ஒதுக்​கப்​பட்​டது.

அந்​தத் தொகையே போது​மான​தாக இல்​லாத நிலை​யில், தற்​போது விரிவுபடுத்​தப்​படும் திட்​டத்​துக்​கான நிதி ஒதுக்​கீடு மற்​றும் உண்​மை​யான வரு​வாய் இழப்​புக்கு இடையே​யான வேறு​பாட்டை தமிழக அரசு கவனத்​தில் கொள்ள வேண்​டும்.

மேலும், 15-வது ஊதிய ஒப்​பந்​தக் கோரிக்​கை​களின்​போது, மகளிர் கட்​ட​ணமின்றி பயணம் செய்​யும் பேருந்​துகளில் பணிபுரி​யும் ஓட்​டுநர் மற்​றும் நடத்​துநர்​களுக்கு ஏற்​படும் வசூல் படி இழப்பை ஈடு செய்ய வேண்​டும் என்று தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது. ஆனால், அந்​தக் கோரிக்கை இது​வரை நிறைவேற்​றப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT