ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அம்பாத்துரை கிராமத்தில் புதிய ரேஷன் கடையை திறந்துவைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல்: கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 24 தொகுதிகள் மட்டுமே அதிமுக போட்டியிடும் நிலை உள்ளது. இவர்கள் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெறப்போகிறார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்நாட்டான்பட்டி, சீவல்சரகு, அம்பாத்துரை, பிள்ளையார்நத்தம் ஆகிய கிராமங்களில் புதிய ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்து மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை முதல்வர் சரியாகச் செய்வார். மக்களுக்கு குறை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்.
2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடமில்லை. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதி போக மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடவேண்டிய நிலைமை உள்ளது. இவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.
திமுக ஆட்சிக்காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊராட்சி துறையில் 22,000 கிலோமீட்டருக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் கிராம சாலைகள் இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பழைய வீடுகளுக்கு பதிலாக 25,000 புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தேர்தலுக்காக லேப்டாட் வழங்கவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து வழங்குவோம். விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடிவரும். விடுபட்டவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட தமிழக முதல்வர் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.