சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.
தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என அறிவி்த்த பேரவைத் தலைவரின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘சி.விஜயபாஸ்கர் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு நிலுவையில் உள்ளது.
அந்த நிலையில் அவரது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். பேரவைத் தலைவரின் இந்த முடிவு அரசியல் சாசன விதிகளுக்கும், இயற்கை விதிகளுக்கும் புறம்பானது.
எனவே, இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.