தமிழகம்

சட்டப்பேரவையில் எதிரொலித்த கறிக்கோழி விவசாயிகள் விவகாரம்: அதிமுக வெளிநடப்பு

நாளை விவாதிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி!

தமிழினி

சென்னை: கறிக்கோழி விவசாயிகள் விவகாரம் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், “பதில் தயாரானதும் அதுகுறித்து விவாதிக்கலாம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததையடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சியின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.200 என்ற விலையில் இருந்து வந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்து சுமார் ரூ.380 வரை எட்டியுள்ளது. கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

          

இந்த நிலையில், சட்டப்பேரவையில் கறிக்கோழி விவகாரம் தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசும்போது, “கறிக்கோழி விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து பதில் கிடைத்த பிறகு, நாளை விவாதிக்கலாம். இப்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இருப்பினும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக நேற்று இபிஎஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழகத்திலுள்ள 'கறிக்கோழி பண்ணை விவசாயிகள்' கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.

உணவு மற்றும் மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது இந்நிறுவனங்கள் வளர்ப்பு கூலியாக வழங்கும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசாவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தங்களது போராட்டங்களினால் எந்தவித பயனுமில்லாததால், 1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து திமுக அரசு 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியது. இந்நிலையில் விடியா திமுக அரசு இம்மாத ஆரம்பத்தில் 10 நிர்வாகிகளை எந்தவித காரணமுமின்றி கைது செய்தது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை (விவசாயிகளை) காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. கைதுசெய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களது பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT