சென்னை: சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிகவின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தவிர்த்து, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள மற்ற அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே அறிவித்துள்ளனர். இந்த சூழலில், அவர்களது ஆதரவுடன் ஆட்சியை தொடர்வது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று முதல்வர் விஜய் கருதுவதாகவும், அதனால், அதிமுகவின் ஆதரவைப் பெற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக, அதிமுகவுக்கு 6 அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த வாய்ப்பை பெற அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்க பொதுச் செயலாளர் பழனிசாமி விரும்பவில்லை. அது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என்று அவர் கருதுகிறார். இதனால், பழனிசாமி தலைமையிலும், சி.வி.சண்முகம் தலைமையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.
இதற்கிடையே, பழனிசாமி சரியான கூட்டணியை அமைக்காததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்பதால், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளையும் தங்கள் தரப்புக்கே தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த பழனிசாமி, தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி வருகிறார்.
இதையடுத்து, இரு பிரிவினரும் தனித்தனியே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். தவெகவுக்கு ஆதரவு அளித்து, அமைச்சர் பதவிகளைப் பெறுவது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பிலும் தவெகவுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வது ஆகிய நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் தரப்பு தீவிரமாக பணியாற்றி வந்தது.
பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சி.வி.சண்முகம் தரப்பு தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் 32 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அப்போதுதான் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இல்லாவிட்டால், கட்சி மாறி ஆதரவு அளிக்கும் அனைத்து எம்எல்ஏக்களின் பதவியும் பறிபோய்விடும் என்ற சூழல் உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவாகவும் பிரிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்தனர். இரு அணியினரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பேரவை அலுவல் முடிந்து வெளியேறும் வரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தனர்.
அதன் பின்னர், பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பணன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையாவை சந்தித்து, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக பழனிசாமியையும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்குமாறு கடிதம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையாவை சந்தித்து, அதிமுகவில் தங்களுக்குதான் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதனால் பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும் நியமிக்குமாறு கடிதம் அளித்தனர்.
அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து கடிதம் கொடுத்ததால் சலசலப்பான சூழல் காணப்பட்டது. ஆனால், ‘‘இது தவறான செய்தி’’ என்று பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். சி.வி.சண்முகம், ‘‘கொஞ்சம் பொறுத்திருங்கள்’’ என்று பதில் அளித்தார். இதற்கிடையே, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் அவரது ஆதரவாளர்களும், எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களும் திரண்டபடி இருந்ததால் இரவு வரை பரபரப்பு நீடித்தது.
அக்சர், மில்லர் அரைசதம்: பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்