இடது:புதுச்சேரியில் பழனிசாமி | வலது: அறிவாலயத்தில் ஸ்டாலின்

 
தமிழகம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியா? - திரை மறைவு வியூகமும், உறுதி செய்யும் அறிகுறிகளும்

வீரமணி சுந்தரசோழன்

அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதிரவைக்கும் நிலையில், ஒருவேளை அது சாத்தியமாகுமோ என்பதற்கான சமிக்ஞைகள் இப்போது பலமாக எழ ஆரம்பித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைப்பதற்கான ‘மேஜிக் எண்’ 118-ஐ எட்ட முடியாமல் தவெக திணறி வருகிறது. எப்போது விஜய் கூப்பிடுவார் என காத்திருந்த காங்கிரஸ், முதல் ஆளாக திமுகவுக்கு ‘டாடா பைபை’ சொல்லிவிட்டு தவெகவோடு ஜோடி சேர்ந்துவிட்டது. ஆனாலும், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்யோடு சேர மதில் மேல் பூனை போல யோசித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை பட்டியல் கொடுக்காமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் தரப்பு விஜய்யிடம் கறாராகவே சொல்லிவிட்டது.

இந்தச் சூழலில்தான், யாருமே எதிர்பாராத வகையில் அதிமுக – திமுக கூட்டணி அமையும் என்ற தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்தது. முதலில் இது உண்மையாக இருக்காது என்றுதான் அனைவரும் நம்பினர். ஆனால், வலுவாக இது தொடர்பான பேச்சுக்கள் அதிகரிக்கவே, திமுகவும் அதிமுகவும் பட்டும் படாமலும் இதனை மறுத்துப் பேசின.

ஆனாலும், அக்கட்சியின் சில தலைவர்களின் கருத்துகள், ஒருவேளை இதுபோன்ற பேச்சுக்கள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது. ஏனென்றால் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் யாரும் இந்த தகவலை இதுவரை திட்டவட்டமாக மறுக்கவில்லை. அதுமட்டுமின்றி அதிமுக எம்எல்ஏக்கள் பாதுகாப்புக்காக புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திமுக எம்எல்ஏக்களும் சென்னையிலேயே தங்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், “காங்கிரஸின் முயற்சியை முறியடித்து பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்” என்று தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு பேசிய அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸும், ‘பழனிசாமி முதல்வராவார்’ என்று தெரிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.

47 இடங்களில் மட்டுமே வென்றுள்ள அதிமுக ஆட்சியமைக்கும் என்று இவர்கள் நம்பிக்கையாக சொல்வதன் பின்னணியில் பல்வேறு கணக்குகள் உள்ளன. அது தொடர்பாகவே அதிமுக தலைமை டெல்லியில் தொடங்கி அண்ணா அறிவாலயம் வரை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்துதான் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, ‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதே வேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது’ என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை உற்று நோக்கினால் பல்வேறு குறியீடுகளை பார்க்கலாம். அதன் அடிப்படையில், அதிமுகவுக்கு ஆதரவளிக்க கீழ்கண்ட முக்கிய விஷயங்களை கோடிட்டு காட்டுகிறது திமுக. அதாவது, ‘தமிழகத்தில் மறு தேர்தலுக்கு இடம் கொடுக்க கூடாது, பாஜகவுக்கு இடம் கொடுக்க கூடாது, வளர்ச்சித் திட்டங்களை தொடர வேண்டும்’ என்பதன் அடிப்படையில் இரு கட்சிகளும் கூட்டணியை உருவாக்கலாம். மேலும், தமிழகத்தில் நிலையான ஆட்சி என திமுக குறிப்பிடுவதை உற்று நோக்க வேண்டும். ஏனெனில் தவெக ஆட்சியமைக்க திமுக நிச்சயம் ஆதரவு அளிக்காது. அப்படியானால் அவர்கள் வசம் உள்ள ஒரே வாய்ப்பு, அதிமுக கூட்டணிதான் என்று பார்க்க வேண்டியுள்ளது.

இந்த தீர்மானம்தான் இப்போது பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது. அதேபோல, இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனும், “திமுக - அதிமுக கூட்டணி இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். ஒருவேளை கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து முடிவெடுத்தால் கூட்டணியை ஏற்போம்” என தெரிவித்தார்.

திமுக, அதிமுக ஒன்றிணைந்தால் அதனை பாஜக ஏற்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், பாஜகவின் கூட்டணியில் உள்ள பாமக, அமமுக கட்சிகளுக்கு கூட அழைப்பு விடுக்க மாட்டோம் என தவெக கறாராக சொல்கிறது. தங்களுக்கு எதிராக இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் விஜய்யை வளரவிடுவது ஆபத்து என்றும் அவர்கள் யோசிக்கலாம். அதேபோல தவெகவோடு சேர்ந்து காங்கிரஸும் இங்கே உயிர் பெற்றால், அது தங்களுக்கு தென்னிந்தியா முழுவதும் ஆபத்தாக முடியும் என்றும் பாஜக கணக்குப் போடுகிறது. இதனையெல்லாம் யோசித்து திமுக – அதிமுக கூட்டணியை இலைமறை காயாக பாஜக ஆதரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை இரவு வந்தார். ஒரு மணி நேரம் ரிசார்ட்டில் இருந்த அவர், 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு, அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தக் கூடடத்தில், தமிழக அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரியில் அதைத் தவிர்த்துவிட்டுச் சென்றார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் கூறும்போது, “அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸார் பதவி வெறியால் தமிழக அரசியலை புரட்டி போடும் சூழலை உருவாக்கியதால், அதை தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எம்எல்ஏக்கள் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என கேட்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமையும் வரை காத்திருக்க வேண்டும்” என்றது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், “எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது. திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் அது சாத்தியம்தான்” என்று குறிப்பிட்டிருப்பது நிலைமையை இன்னும் சூடாக்கியுள்ளது.

கர்நாடகாவில் 2018-ல் பாஜக 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோது, 80 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ், 37 இடங்களை மட்டுமே வைத்திருந்த குமாரசாமியை முதல்வராக்கியது. அதே பாணியில் இப்போது தமிழகத்தில் பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டப்படலாம் என்ற தகவல்கள் தடதடக்கின்றன. பார்ப்போம் அடுத்தடுத்த மணி நேரங்களில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்று.

SCROLL FOR NEXT