சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர்கள் பேசியதாவது: பழனிசாமி (அதிமுக): கர்நாடகாவில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்துகள் கேட்க வேண்டும்.
இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ததில், தண்ணீர் இல்லாமல் ஒரு லட்சம் ஏக்கர் வறண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆர்.செல்லசாமி (மார்க்சிஸ்ட்): மேகேதாட்டு அணை விவகாரத்தை நாம் சட்டரீதியாக வெல்ல வேண்டுமே தவிர, அவர்களிடம் சென்று கெஞ்சத் தேவையில்லை. அங்குசென்று அவமானம் ஏற்பட்டால், தாங்குவதற்கு தயார் என்று முதல்வர் சொல்கிறார்.
அது சரியல்ல. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அனைவரின் கருத்துகளை அறிய வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
டி.ராமச்சந்திரன் (இந்தியகம்யூனிஸ்ட்): தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறவேண்டும். அதேபோல், மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடகாவில் காங்கிரசும், பாஜவும் ஒன்றாக இருக்கின்றன.
இவ்விரு பிரச்சினைகளுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளைக் கேட்டு சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
சவுமியா அன்புமணி (பாமக): அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒற்றுமையான நிலைப்பாட்டை எடுத்து அதை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டும். சட்ட முன்னெடுப்புகளையும் கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் 3 வனவிலங்கு சரணாலயங்கள், 12,500 ஏக்கர் காடுகள், அரியவகை உயிரினங்கள் அழிந்துபோகும். எனவே, அங்கே அணைக் கட்டக்கூடாது என்பதுதான் நம் நிலைப்பாடு. இவ்வாறு அவர்கள் பேசினர்.