அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

வ.உ.சியின் 155-வது பிறந்தநாளில் அதிமுக சார்பில் மரியாதை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மு.சக்தி

சென்னை: “கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு, அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான `கப்பலோட்டிய தமிழன்’, `செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155-வது பிறந்த நாள் செப்.9ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அ.இ. அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பா. வளர்மதி, ப. மோகன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன் மற்றும் அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சின்னத்துரை, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், அதிமுக உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT