புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விராலிமலை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர்.

 
தமிழகம்

விராலிமலை இடைத்தேர்தலில் விஜயபாஸ்கரை தோற்கடிக்க அதிமுகவினர் வியூகம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தோற்கடிப்பதற்கான வியூகங்களை அதிமுகவினர் தீவிரமாக வகுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2011-ம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்று வந்த சி.விஜயபாஸ்கர், அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் தவெகவில் இணைத்தார்.

இதையடுத்து, தவெகவுக்குச் சென்றவர்களை உடனடியாக நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதிய பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்து அறிவித்தது. மேலும், விஜயபாஸ்கரின் வலையில் அதிமுகவினர் சிக்கிவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் தலைமை ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கட்சித் தலைமை ஆலோசனையின் பேரில், விராலிமலை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள் ராமு, வி.பழனிவேல், ஞான.கலைச்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், விராலிமலை தொகுதி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விராலிமலை தொகுதியில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் விவரங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைப்பது.

பிற மாவட்டங்களில் இருந்து வரும் அதிமுகவினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்பாக, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை தேர்தல் பணிகளுக்காக ஓரிரு நாட்களில் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசியது: விஜயபாஸ்கரின் சுயநலத்தால்தான் விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. அதிமுக ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் விராலிமலை தொகுதி அதிமுகவினரின் விவரங்களை விஜயபாஸ்கர் சேகரித்து, தனக்கு ஆதரவு கோரி வருகிறார்.

இதுமட்டுமின்றி, அவர் இன்னும் பல அரசியல் தந்திரங்களைச் செய்யக்கூடியவர் என்பது நமக்குத் தெரியும். எனவே, விஜயபாஸ்கரை யாரும் நம்ப வேண்டாம். விராலிமலை தொகுதி அதிமுகவினர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரைவிட கூடுதலாக நாமும் வியூகங்களை வகுத்து செயல்படுவோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், களத்தில் இறங்கி முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். முன்பிருந்த குளத்தூர் தொகுதியும், அதன்பிறகு உருவான விராலிமலை தொகுதியும் என்றைக்கும் அதிமுகவின் கோட்டைதான். அதை இந்த இடைத்தேர்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

விராலிமலை தொகுதியைத் தமிழகமே உற்று நோக்கி வருவதால், விஜயபாஸ்கருக்கு இதில் முறையான பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT