தமிழகம்

“தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்” - பியூஷ் கோயல் சந்திப்புக்குப் பின் பழனிசாமி பேட்டி!

வெற்றி மயிலோன்

சென்னை: “பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும். தமிழகத்தில் அமையவுள்ள அதிமுக ஆட்சியில் தமிழகம் இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை காணும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் பியூஷ் கோயல் காலை உணவு அருந்தினார்.

          

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம் . நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும். இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இன்று சிறுமிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது, எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. இந்த ஆட்சியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

எங்கள் கூட்டணி மிக வலிமையான கூட்டணி. இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாற பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் அமையவுள்ள அதிமுக ஆட்சியில் தமிழகம் இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை காணும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT