தமிழகம்

மேகேதாட்டு விவகாரம்: பேரவைத் தீர்மான திருத்தம் ரத்து கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்திய திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக கொறடா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேகேதாட்டு குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அதிமுக ,பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

‘சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18-ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இரண்டு வாரங்களில் தமிழக தலைமைச் செயலாளர், சட்டமன்ற செயலாளர், மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

SCROLL FOR NEXT