செங்கோட்டையன் 
தமிழகம்

கோபியில் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து, கோபிசெட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளர் பிரபு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வேட்புமனுவில், சொத்து, குற்ற வழக்கு விவரங்கள் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை சான்றளித்து கையெழுத்திட்டுள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி விட்டது. அதனால் அந்த வேட்புமனுவை ஏற்றது முறையற்றது என்பதால், செங்கோட்டையன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, லால்குடி தொகுதியில், தவெக வேட்பாளரை விட 2,739 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏழு நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை லீமா ரோஸ் மறைத்துள்ளதாகவும், அதிமுக துண்டு அணிந்து கொண்டு, தேவாலயங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல, புதுக்கோட்டை தொகுதியில், 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ முத்துராஜாவின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT