அதிமுக விருப்ப மனு

 

படம்: எல்.சீனிவாசன்

தமிழகம்

அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அனலி

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பெற கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அதிமுக. அதன்படி டிச.28 முதல் டிச.31 வரை விண்ணப்பங்களைப் பெற்று அதனை முறையாகப் பூர்த்தி செய்து வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமி​ழ​கம், புதுச்​சேரி, கேரளா ஆகிய மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வை​களுக்கு பொதுத்​தேர்​தல் வரவுள்​ள​தால், அரசி​யல் கட்சிகள் தேர்​தல் பணி​களை தொடங்​கி​விட்​டன. அதன்​படி, அதி​முக சார்​பில் போட்​டி​யிட விரும்​பும் நபர்​கள், விருப்​பமனு வழங்க ஏது​வாக, விருப்​பமனு விநி​யோகம், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தமி​ழ​கத்​தில் பொது மற்​றும் தனி தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம், புதுச்​சேரி​யில் போட்​டி​யிடு​வதற்​கான விருப்ப மனு ரூ.5 ஆயிரம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இந்நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 15.12.2025 முதல் 23.12.2025 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு தொடர்ந்து வரும் வேண்டுகோளினை ஏற்று, 28.12.2025 – ஞாயிற்றுக் கிழமை முதல் 31.12.2025 – புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT