அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
சென்னை: நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த 7.5 உள்இட ஒதுக்கீட்டுக்கு திமுகதான் காரணம் என்பதுபோல மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை முதல்வர் ஸ்டாலின் கட்டமைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக மாணவர்களோ, பெற்றோரோ, எதிர்க்கட்சியினரோ கோராத போதும், எனது மனதில் உதித்த இந்த திட்டத்தை நிறைவேற்ற, ஆளுநரின் ஒப்புதலுக்கு காலதாமதமானதால், அந்த நடப்பு கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.
சத்துணவு திட்டம் என்றால் எம்ஜிஆர், தொட்டில் குழந்தை திட்டம் என்றால் ஜெயலலிதா, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்த திட்டத்தையே உல்டாவாக்கி இந்த முதல்வர், காலை உணவுத் திட்டத்தை தான்தான் புதிதாக கொண்டு வந்தது போல தம்பட்டம் அடித்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் நான்கரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கியதுடன் அரசுக்கான நிதியை பெருக்குவதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் கடந்த 3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே அடிக்கல் நாட்டுவது, ஒப்பந்தம் கோருவது, மக்களின் வரி பணத்தில் விளம்பரம் தேடுவது போன்றவைகளால், தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று முதல்வர் ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
தான் ஒரு முதல்வர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயை திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது. பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவர் வாழ்க்கை நிலைக்காது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.