சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்துக்கு முதல் முறையாக நேற்று வந்தனர்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த பியூஷ் கோயலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு பியூஷ் கோயல் வந்தார். முன்னதாக, நயினார் நாகேந்திரன் வீட்டில் அர்ஜூன் ராம் மேக்வால் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.
பின்னர், அவர்களும் பாஜக தலைமை அலுவலகம் வந்தனர். இதையடுத்து, மாநில மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன், விஜயதரணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை, ஒருங்கிணைப்பு மற்றும் தமிழக அரசியல் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மையக் குழு கூட்டத்தை முடித்துவிட்டு, பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், எல்.முருகன் ஆகியோர் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். அங்கு, அதிமுக
பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் போது, தொகுதி பங்கீடு, கூட்டணி, தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவி தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்தனர். அப்போது, இருவரையும் கூட்டணியில் சேர்க்க பழனிசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வெளியே வந்த நயினார் நாகேந்திரன், ‘‘பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது’’ என்றார். பின்னர் பியூஷ் கோயல் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் என அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசை உருவாக்குவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு. இது பிரதமர் மோடியின் உறுதிமொழி. அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிற தோழமைக் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத் துக்காகப் பணியாற்றும்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நிலவரங்கள் குறித்து பியூஷ் கோயல் விரிவாக கேட்டறிந்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல் பட வேண்டும் என்பது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.
அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இன்று தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு கொந்தளிப்போடு இருக்கின்றனர். இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கு தேவையான நட வடிக்கைகளை அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து எடுக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக இந்த கூட்டம் ரத்து செயயப்பட்டது. இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகை சென்ற பியூஷ், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தேநீர் விருந்தில் பங்கேற்றார்.
கமலாலயத்தில் அறிவுரை: கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணி, விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பியூஷ் கோயல் கேட்டறிந்தார். அப்போது, திமுகவின் சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரித்து விடுவார். இதனால், திமுகவுக்கு தான் பாதிப்பு. எனவே, இனி, விஜய்யை கூட்டணிக்கு அழைப்பது குறித்தோ, அவரை விமர்சித்தோ யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என பாஜகவினருக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.