திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியை முன்னாள் மேயரும், அமைப்பு செயலாளருமான வி.மருதராஜ் புறக்கணித்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட ஜெ., பேரவை இணைச்செயலாளர் பாரதிமுருகன், பாஜக கிழக்கு மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் தலைவர் தனபாலன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் கவலையில்லை. ஐந்து தடவை எம்.பி., தேர்தலில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகி ஒரு முறை அமைச்சர் என இத்தனை அனுபவங்களோடு மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்” என்றார்.
புறக்கணித்த முன்னாள் மேயர்:
திண்டுக்கல்லில் நடந்த அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு இல்லை எனக் கூறி முன்னாள் மேயரும், அமைப்பு செயலாளருமான வி.மருதராஜ், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தகவல் தொழில்நுட்ப அணியில் பொறுப்பு வகிக்கும் இவரது மகன் வீரமார்பனுக்கு திண்டுக்கல்லில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனது மகனுக்கு சீட் வழங்கப்படாமல் மூன்றாவது முறையாக திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு சீட் வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கமாக தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியை புறக்கணித்த வி.மருதராஜ், ஒரு முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். உப்பு வாரியத்தலைவராகவும் பதவி வகித்தவர். திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் மேயர், தற்போது அமைப்புச் செயலாளராகவும் உள்ளார். திண்டுக்கல் அதிமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சியை புறக்கணித்தது அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசலை வெளிக்கொண்டுவந்துள்ளது என்கின்றனர் கட்சியினர்.