சென்னை: துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், பதற்றமான வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளதால், தொடர்புடைய அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் புதுமையான முறைகேடு நடந்துள்ளது. அங்கு பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அடையாளம் கண்டறியப்பட்டு இருந்தது.
தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 22 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. அங்கு வாக்குச் சாவடியை கைப்பற்ற வாய்ப்புள்ளது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆனால், அது அப்படியே நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இது குறித்து எங்களது சேப்பாக்கம் - திருவல்லிகேணி வேட்பாளர் ஆதி ராஜாராம் மனு அளித்தார். குறிப்பாக, 116-வது வார்டில் உள்ள கவுன்சிலர் காமராஜ் பெயர், பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளது.
இவை அனைத்தும் கடந்த மக்களவை தேர்தலின் போதே அங்குள்ள தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்போது அங்கு உள்ளவர்கள் எல்லாம் புனிதமானவர்களாக ஆகிவிட்டார்களா? பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் சாதாரணமானதாக மாறிவிட்டதா? ஒவ்வொரு தேர்தலின் போதும் கலவரம் நடக்கக் கூடிய வாக்குச் சாவடிகள் அவை.
அதனால், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் மத்திய படையினர் 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால், இந்த முறை துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் தொகுதி என்பதால் அது மாற்றப்பட்டுள்ளதோ என எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என புகார் அளித்திருக்கிறோம்.