சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை அதிமுக வெற்றிபெற்றபோதிலும் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்பி கேட்டதால், இத்தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக விட்டுக்கொடுத்தது.
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 முறை இந்திய தேசிய காங்கிரஸும், ஒரு முறை பார்வர்டு பிளாக் கட்சியும், 5 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 2006-ல் திமுக சார்பில் போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரனும், 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி. உதயகுமாரும் வெற்றிபெற்றனர்.
2016-ல் அதிமுகவில் சுப்பிரமணியனும், 2019 இடைத்தேர்தலில் அதிமுக ராஜவர்மனும் வெற்றிபெற்றனர். கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் ரகுராமன் வெற்றிபெற்றார்.
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு பழனிசாமி முதல்வரானதும் அதிமுகவில் விருதுநகர் மாவட்டம் கட்சி ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளராக ரவிச்சந்திரனும், மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் நியமிக்கப்பட்டனர்.
இதன் பின்னர், அதிமுகவில் இரு கோஷ்டி ஏற்பட்டது. கடந்த 2016-ல் இத் தொகுதி அதிமுகவுக்கு கொடுக்கப்பட்டபோது வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருந்த எதிர்கோட்டை சுப்பிரமணியன் திமுக வேட்பாளர் சீனிவாசனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் தொடங்கிய அமமுகவில் சுப்பிரமணியன் இணைந்தார். அவருடன் கட்சித் தாவலில் ஈடுபட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
2019-ல் மக்களவைத் தேர்தலுடன் சாத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடத்தப்பட்டது. அப்போது அமமுக சார்பில் சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் வெற்றி பெற்றார்.
பின்னர் சுப்பிரமணியன், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரவிச்சந்திரன், ராஜவர்மன் ஆகியோர் சீட் பெற தீவிர முயற்சியில் இருந்தனர். ரவிச்சந்திரனுக்கே வாய்ப்பு அதிகம் என்ற சூழலில், சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட விரும்பி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் நேரடியாக கேட்டுள்ளார். கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் ரவிச்சந்திரனிடம் விட்டுக்கொடுக்கும்படி பழனிசாமி கேட்டுள்ளார்.
இதையடுத்து சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு கை மாறியது. ரவிச்சந்திரன் விரும்பியிருந்தால், அருப்புக்கோட்டை அல்லது திருச்சுழி யில் போட்டியிட்டிருக்கலாம்.
அத்தொகுதி நிர்வாகிகளுக்காக ஒதுங்கிக்கொண்ட ரவிச்சந்திரன் கூட்டணிக்காக சாத்தூரை விட்டுக் கொடுத்ததால், அவருக்கு உரிய முக்கியத்துவத்தை கட்சி வழங்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.