கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக வேட்பாளர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெற உள்ளது.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் மற்றும் நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (ஏப்.22) வந்தனர். பின்னர், அவர்கள் ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தின் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், கடந்த சில நாட்களாக கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதை தடுக்க வலியுறுத்தி மனுக்கள் அளித்தாலும் மாவட்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அம்மன் கே.அர்ச்சுணன் கூறும்போது, ‘‘ கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு வாக்குக்காக பணம் கொடுக்கின்றனர். பணம் கொடுப்பவர்களை பிடித்துக் கொடுத்தாலும், போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்றார்.