திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தங்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என பாஜகவினர் அங்கலாய்க்கின்றனர். இதனால், இந்தத் தொகுதியில் அதிமுக-பாஜக நிர்வாகிகள் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் உள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி, பாஜகவின் அபிமான தொகுதிகளில் ஒன்று. இங்கு பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று அக்கட்சியினர் எண்ணியிருந்த நிலையில், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர்.
ஆனாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதிமுகவுக்காக ‘கடமைக்கு’ பணியாற்றி வருகின்றனர். அதிமுக வேட்பாளராக மூத்த அரசியல்வாதி ஆர்.மனோகரன், ஏனோ தங்களை கண்டுகொள்வது இல்லை என்கின்றனர் பாஜக அடிமட்ட தொண்டர்கள்.
பாஜக மட்டுமல்லாது அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் இந்த அதிருப்தி குரல் கேட்கிறது. இதுகுறித்து பாஜக அணி பொறுப்பாளர்கள் சிலர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் உள்ளனர். 310 பூத் கமிட்டிகள் உள்ளன.
ஒரு பூத் கமிட்டியில் 10-ல் இருந்து 15 பேர் வரை உள்ளனர். இவர்கள்தான் தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்குப்பதிவின்போதும் முக்கிய பங்காற்றுவார்கள். ஆனால் இதுவரை அதிமுக சார்பில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. மேலும், எங்களது கட்சியிலும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
எங்களது கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு நாங்கள் தீவிரமாக உழைக்கத் தயாராக உள்ளோம். ஆனால், அதிமுக தரப்பில் எங்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. வேட்பாளர் ஓட்டு கேட்க செல்லும் இடம் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதில்லை.
ஒரு மணி நேரத்துக்கு முன்பு பெயருக்கு ஒன்றிரண்டு நிர்வாகிகளை மட்டும் பிரச்சார வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். பாஜகவினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர்.
உரிய மரியாதை அளித்தால் நாங்கள் 10 பேர் அல்ல, 100 பேருடன் கூட பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி செய்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றியை நிச்சயம் அறுவடை செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.