தமிழகம்

கடலூர் | ‘நெல் கொள்முதல் நிலையத்தில் வசூல்’ - தவெக மீது அதிமுக குற்றச்சாட்டு

என்.முருகவேல்

கடலூர்: பண்ருட்டியை அடுத்த விசூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தவெகவினர் மிரட்டி பணம் வசூலிப்பதாக அதிமுகவினர் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டதைக் கண்டு, அதிமுகவினர் மீது தவெக மாவட்டச் செயலாளர் தலைமையில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் தவெக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் என்பவர், அங்கு பணிபுரியும் பட்டியல் எழுத்தரை மிரட்டி பணம் வசூலிப்பதாக, அப்பகுதி அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட பிரபாகரன், அப்படி ஒரு சம்பவமே நடைபெறாத நிலையில் பொய்யான வீடியோக்களை சமூக வலை தளத்தில் ராதாகிருஷ்ணன் பதிவிடுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தவெக மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட தவெகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் திரண்டு, பொய்யான வீடியோவை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டு, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு போலீஸார், ஆய்வாளர் தர்மலிங்கம் வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT