கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிளை ஆட்சியர் ச.தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்.

 
தமிழகம்

பொது மக்களின் மனுக்களை 10 - 15 வினாடிகளில் பதிவேற்றம் செய்யும் ஏஐ முறை அமல்: கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

‘தமிழகத்திலேயே இது முதன்முறை...’

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தமிழகத்திலேயே முதன்முறையாக கிருஷ்ணகிரியில் 10 - 15 வினாடிகளில் பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யும் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியது: “மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து, 500 முதல் 800 வரை கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது. பொது மக்களின் சிரமங்களைப் குறைக்கவும், அவர்கள் அளிக்கும் மனுவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதற்காகவும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன்பு, மனு எழுதுவதற்கு பொதுமக்கள் தனி நபர்களிடம் ரூ.50 வழங்கி வந்தனர். பொதுமக்கள் சிரமமின்றி மனுக்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் 6 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இலவசமாக மனு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மனு எதுவும் எடுத்து வராத பட்சத்தில், அவர்களுடைய கோரிக்கையை குரல் வழி உள்ளீடு மூலமாக ஒரு மனுவாக மாற்றித் தரும் ஏஐ தொழில்நுட்பத்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை நிலம் தொடர்பு, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, கழிப்பறை வசதி, வீடு மற்றும் இதர நலத்திட்ட மனுக்கள் என பிரிக்கப்பட்டு, அவற்றை செயலி மூலம் பதிவேற்றம் செய்து, அந்த மனுவிற்கான குறியீடு எண்களை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக மனுக்களை பதிவேற்றம் செய்ய 1 நிமிடம் 20 வினாடி எடுத்துக்கொள்கிறது. ஆனால், ஏஐ தொழில் நுட்பத்தில் 10 - 15 வினாடியில் பதிவேற்றம் செய்து, முதல்வரின் முகவரி செயலின் மூலம் மனுக்களுக்கான குறியீடு எண் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்திலேயே முதன்முதலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி மனுக்கள் பெறும் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையை தொடர்ந்து மூன்று முதல் நான்கு வாரம் செயல்படுத்தும்போது, இதில் உள்ள திருத்தங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்.

மேலும், இந்தத் திட்டம் குறித்து தமிழக முதல்வரிடம் சமர்பித்து, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT