தமிழகம்

விவசாயிகளுக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம்: வேளாண் அமைச்சர் வினோத் உறுதி

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “கடந்த ஆட்சி கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு புதிய கோரிக்கைகளை முதன்மையாகக் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்” என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தலைமையில், தலா 2 திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், அண்மையில் தீ விபத்தினால் உயிரிழந்த சிறுவனின் தாயார் உள்பட 44 பேருக்கு மொத்தம் ரூ.18.90 லட்சம் மதிப்பிலான இடத்துக்கான பட்டாவை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சேஷம்பாடியில் வசித்து வரும் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் பேசி, அப்பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்புத் தொகுப்புத் திட்டம் இலக்கு நிர்ணயம் முடிந்துவிட்டதாகக் கூறி, சில விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் கிடைக்கவில்லை என்ற புகாருக்கு, உடனடியாக விசாரித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு புதிய கோரிக்கைகளை முதன்மையாகக் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் வினோத் கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரகாரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குள் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள மருத்துவரிடம் கால்நடைகளுக்கு உரிய மருந்துகள் ஊசிகள் உள்ளதா, வருகைப் பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா, காலிப் பணியிடங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கை வழங்க வேண்டும் என்று வினவினார். பின்னர் தடுப்பூசி வைத்துள்ள குளிரூட்டும் அறைக்குள் சென்று முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டார்.

மேலும் அவர், ‘கால்நடை மருத்துவமனைக்ளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தற்போது கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் உருவாகி வருகிறது. அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மருந்து மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். வேறு ஏதும் குறைகள் இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் இங்கு கொண்டு வரும் கால்நடைகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என அலுவலரிடம் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT