அமைச்சர் வினோத் ஆய்வு
கும்பகோணம்: “வேளாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். மழையால் பயிர்கள் சேதம் அடையக் கூடாது என அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது” என வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் மூர்த்தி ரோடு, செக்காங்ஙண்ணி, உள்ளூர் பிரிவு வாய்க்கால், பாத்திமா நகர், வீரையா நகர், தாராசுரம் காய்கறி மார்க்கெட், மடத்துத்தெரு மோரி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பருவமழைக் காலங்களில் மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கும், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ரேவதி, கோட்டாட்சியர் திருமலை, மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் கூறியது: “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர, ஒன்றியப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் மழைநீர் தேங்காதவாறும், கடந்த ஆண்டுகளில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து, வரும் மழைக் காலங்களில் பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக தூர்வரப்படாத வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது.
வெற்றி விவசாயிகள் உரிமைத் திட்டத்தில் ஒரு சில இடங்களில் குறைபாடுகள் உள்ளன. அவை விரைவில் சரிசெய்யப்படும்.
விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்காமல் இருப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சரிசெய்யப்படும்.
கும்பகோணத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.
கும்பகோணத்தில் உள்ள சுகாதார சந்துகள் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் உள்ள பகுதிகள் மட்டப்படுத்தி விழாக் காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான சாலையான ஆயிகுளம் சாலையில் தற்காலிக கடைகள் அமைப்பது தமிழக வெற்றி கழகத்தினர் கிடையாது.
மழையால் பயிர்கள் சேதம் அடையக் கூடாது என அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மழையால் நீர் தேங்கி விளைபொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால், வேளாண்மை அதிகாரிகள் அந்தக் களத்துக்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நஷ்டமாகும் பயிர்கள் குறித்து கணக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
அதன்பிறகு விவசாயிகளுக்கு என்ன பலன் தருமோ, அதன்படி வேளாண்மைத் துறை சார்பில் செய்து தரப்படும்.
இதேபோல் வேளாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை விரைவில் இடமாற்றம் செய்ய உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.