கோப்புப் படம்
சென்னை: நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆக அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக வேளாண் துறை செயலர் பொ.சங்கர் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் வேளாண் துறைச் செயலர் பொ.சங்கர் கூறியது: “வேளாண் பட்ஜெட்டில் ரூ.600 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம், ஆதிதிராவிடர் - பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.56.72 கோடியில் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம், சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி, ரூ.22.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழகம், ரூ.23 கோடியில் விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.63.81 கோடியில் சிறுதானிய இயக்கம் என பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. புதிதாக ஏற்படுத்தப்படும் வேளாண் அமைப்புகள் விவசாயிகளுக்கு நீண்ட கால நோக்கில் பலன் அளிப்பவை.
வெங்காயத்துக்கு ஆண்டு முழுவதும் நல்ல விலை கிடைக்கும் விதமாக, ரூ.22.80 கோடியில் 57 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட உள்ளன. 1,000 விவசாயிகளுக்கு ரூ.23.06 கோடி மானியத்தில் சோலார் பம்ப்செட் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ட்ரோன் ஆபரேட்டர் பயிற்சி, வேளாண் பண்ணை வாகனங்கள் ஓட்டுநர் பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் வாரம் ஒருநாள் ஆர்கானிக் வேளாண் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
நெல் சாகுபடிப் பரப்பு குறையாமல் தக்கவைத்துக் கொள்ள விவசாயிகளுக்கு உற்பத்தி, விநியோக மானியங்கள் வழங்கப்படுகின்றன. நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆக அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கையையும் அரசு பரிசீலித்து வருகிறது.
எல்-நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என வானிலை முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஹைதராபாத்தில் உள்ள மத்திய தரிசு நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (CRIDA) வரையறுத்துள்ள மாவட்ட வேளாண் எதிர்பாரா நிகழ்வு திட்டம் (District Agriculture Contingency Plans-DACP) என்ற ஆய்வை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம். மாவட்ட ஆட்சியர்களுக்கு இதுபற்றிய வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பாதிப்புகளை எதிர்கொள்ள வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலரும் ஆலோசனை நடத்தியுள்ளார். எல்-நினோ விளைவு குறையக்கூடும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. அவ்வாறு குறைந்தால், தென்மேற்குப் பருவமழையின் 2-வது கட்ட மழை இயல்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் காவிரியில் தண்ணீர் வந்து, அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
வேளாண் வணிக ஆணையர் ஆர்.கண்ணன், வேளாண் இயக்குநர் கே.வீ.முரளிதரன், தோட்டக்கலை, மலைப் பயிர்கள் இயக்குநர் ஜெ.விஜயா ராணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.