மேட்டூர் அணை நீர்மட்டம் 99.84 அடியாக சரிந்த நிலையில், இடதுகரையில் உள்ள 16 கண் மதகு பகுதியின் கீழ் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் 443 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2025 ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும், நீர்வரத்து 6,339 கன அடியாகவும் இருந்தது.
தொடர்ந்து, கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை ஜூன் 29-ம் தேதி எட்டியது.
இதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழையால் மேட்டூர் அணை 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்து, அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
2024 அக். 23-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நேற்று காலை வரை 443 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்த நிலையில், நேற்று காலை நீர்மட்டம் 99.84 அடியாகவும், நீர் இருப்பு 64.63 டிஎம்சியாகவும் குறைந்தது.
தண்ணீர் திறப்பு குறைப்பு: அணைக்கு விநாடிக்கு 208 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 8,000 கனஅடியிலிருந்து 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் காலை 3,000 கனஅடியாக அதிகரித்தது. அதே நேரத்தில், நேற்று காலை மீண்டும் 2,000 கனஅடியாக குறைந்தது.