திருவள்ளூர்: தொடர் நீர் வரத்தால், 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி கள் முழுமையாக நிரம்பின. ‘டிட்வா’ புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நின்றது.
மழை நின்றாலும், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.
உபரி நீர் வெளியேற்றம்: அதன் காரணமாக, கடந்த 9-ம் தேதி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியும், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியும் முழுமையாக நிரம்பின.
ஆகவே, இரு ஏரிகளின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, நேற்று மாலை முழுமையாக நிரம்பியது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 சென்னை குடிநீர் ஏரிகளும் நிரம்பியுள்ளன என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் 3 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளதால் வரும் கோடையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.