பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.படங்கள்: எம்.முத்துகணேஷ்
பரங்கிமலை: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நேற்று நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் 342 அதிகாரி பயிற்சி மாணவர்கள், இந்திய ராணுவத்தின் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தனர். இவர்களில் 313 ஆண்கள், 29 பெண்கள் அடங்குவர். இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 17 அதிகாரி பயிற்சி மாணவர்களும் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில் விழா நேற்று நடைபெற்றது. குறுகிய கால சேவைப் பிரிவின் 122-வது அணியினர் மற்றும் பெண்களுக்கான குறுகிய கால சேவைப் பிரிவின் 36-வது அணியினரின் பயிற்சி நிறைவு விழாவாக அமைந்தது. பல மாதங்களாக கடுமையான ராணுவப் பயிற்சியை மேற்கொண்ட அதிகாரி பயிற்சி மாணவர்கள், ராணுவ இசைக்கு ஏற்ப கச்சிதமான ஒருங்கிணைப்புடன் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் அணிவகுப்பு நேர்த்தி பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அணிவகுப்பை பார்வையிட்டு, பயிற்சியை நிறைவு செய்த புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து, தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும், மாறிவரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ராணுவ அதிகாரிகள் தங்களது அறிவையும் திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பக் கருவிகள், முடிவெடுக்கும் செயல்முறைக்கு உதவினாலும், அதிகாரிகள் தங்களது சுய சிந்தனை மற்றும் பகுத்தறியும் திறனை அவற்றிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. எதிர்கால பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியம் என்றார்.
அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற அடையாளச் சின்னம் அணிவிக்கும் நிகழ்வில், புதிய அதிகாரிகளின் தோள்களில் அவரவர் ராணுவப் பிரிவுகளின் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதையடுத்து, இந்திய அரசியலமைப்புக்கு உண்மையாக இருந்து, எந்தச் சூழ்நிலையிலும் நாட்டைப் பாதுகாப்பதாக அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வாட்டினி, பூட்டான், லெசோத்தோ பேரரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 ஆண், 10 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் பயிற்சியை நிறைவு செய்தனர். இது இந்தியாவுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை வெளிப்படுத்துவதாக அமைந்தது. விழாவில் அதிகாரி பயிற்சி மாணவர்களின் பெற்றோர், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குர்கீரத் சிங் ஹோராவுக்கு ‘கௌரவ வாள்’ மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. அபினவ் சௌஹானுக்கு அதிகாரிகள் பயிற்சி அகாடமி தங்கப் பதக்கமும், நிகெட் சிங் தோமருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.