தமிழகம்

முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த 72 வயது தாயை மீட்கக் கோரிய தத்து மகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ், மாயமான தனது 72 வயது தாயார் ஜெயலட்சுமியை மீட்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர். பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஜெயலட்சுமி (72) திருமணம் ஆகாதவர். ஏராளமான சொத்துகள் உள்ளன. உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த அவர், செல்வ கணேஷை தத்தெடுத்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியை மிரட்டி சில சொத்துகளை செல்வகணேஷ் அபகரித்துள்ளார்.

          

இதற்குப் பயந்து, ஜெயலட்சுமி முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, தாயாரைக் காணவில்லை என்று மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஜெயலட்சுமியை போலீஸார் ஆஜர்படுத்தியபோது, "செல்வகணேஷின் குணத்தை அறியாமல் தத்தெடுத்து விட்டதாகவும், அவரால் தனது உடைமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததால், அடைக்கலம் தேடி முதியோர் இல்லம் சென்றதாகவும்" அவர் தெரிவித்தார்.

சட்ட விரோதமாகவும், தன்னைக் கட்டாயப்படுத்தியும் கையெழுத்துப் பெற்ற ஆவணங்களை ரத்து செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனவே, ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தப் பணத்தை அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும். மேலும், ஜெயலட்சுமியிடம் சட்டவிரோதமாக கையெழுத்துப் பெற்று நடைபெற்ற ஆவணமாறுதல்களை ரத்து செய்வது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் காவல் ஆய்வாளர், மூதாட்டியின் புகார் தொடர்பாக வழக்குப் பதிந்து, மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூதாட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக திண்டுக்கல்எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 2-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT