திண்டுக்கல்: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தல் வருகிறது என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்து வருகிறார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அன்றாடம் கூலி வேலை செய்கின்ற கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதன்முதலாக ஒரு பைசா கூட செலவில்லாமல் சிலிண்டர் வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதிமுகவினர் நாலு சிலிண்டர் தருவோம் என்று சொல்வார்கள். அது எல்லாம் பொய். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. எதிர்க்கட்சியாக கூட வரப் போவதில்லை
வாக்குறுதிதானே சொல்லிவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் இதை நம்ப மாட்டார்கள். 70 சதவீதம் அல்ல 100 சதவீத மக்கள் நமது முதல்வர் மீது நம்பிக்கையாக உள்ளனர். சொன்னதையும், சொல்லாததையும் செயல்படுத்தக்கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அவரவர் இருக்கும் பகுதியில் கல்வி பயிலும் வசதியை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர். மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்பப்போவதில்லை. மக்களும் நம்பபோவதில்லை. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றவர் இப்போது எப்படி கூட்டணிக்கு சென்றார்? தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் பாஜக கூட்டணியில் உள்ளார். அவர் கட்சியை அடகு வைத்துள்ளார்.
மக்கள் தீர்மானித்துவிட்டனர், மீண்டும் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக்க. 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சியினரிடம் எந்த ஆயுதமும் இல்லை.
தமிழகத்தில் 24 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டதை அதிமுக ஆட்சியில் குறைத்தனர். எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார நிபுணரா? அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார்? மக்களின் ஏகோபித்த முடிவு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்பது.
எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்த தேர்தல் அறிக்கை புஸ்வானமாக போய்விட்டது. இப்பொழுது அறிவித்ததும் புஸ்வானமாக போய்விடும். இவர்களது தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள். கூட்டணி குறித்து தமிழக முதல்வர்தான் முடிவு செய்தார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் நிதி ஒதுக்க மறுக்கிறது மத்திய அரசு. இந்தியை திணித்ததால் தான், காங்கிரஸ் தமிழ்நாட்டில் போய்விட்டது. அகில இந்திய கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் அறிவித்திருக்க வேண்டும். இதுவரை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. எஸ்ஐஆர் குறைகள் குறித்து தற்போது சிந்திக்கவேண்டாம். விடுபட்ட வாக்காளர்கள் தங்களை பட்டியலில் இணைத்துக்கொண்டு தேர்தல் சந்திக்க வேண்டும்” என்றார்.