நாகப்பட்டினம்: இந்த தேர்தலில் மத்திய மண்டலத்தில் மொத்தமுள்ள 41 சட்டப் பேரவை தொகுதிகளில் 13 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ள அதிமுக, மீதமுள்ள 28 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பது ஏற்கெனவே முடிக்கப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை நேற்று கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
அதில் மத்திய மண்டலத்தில் உள்ள 41 சட்டப்பேரவை தொகுதிகளில் 13 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பாஜகவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர் என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகியவை கோயில் நகரங்களாகும்.
மற்றொரு கட்சியான பாமகவுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், கீழ்வேளூர் ஆகிய 3 தொகுதிகளும், அமமுகவுக்கு மன்னார்குடி, திருவையாறு, திருச்சி மேற்கு ஆகிய 3 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமாகாவுக்கு கோயில் நகரமான கும்பகோணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தாமரை சின்னத்தில்தான் தமாகா போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் முக்கிய கோயில் நகரங்களில் தாமரை சின்னம் போட்டியிட வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் கிட்டத்தட்ட நிறைவேறி உள்ளது எனலாம். இந்திய ஜனநாயக கட்சிக்கு வழங்கப்பட்ட 2 தொகுதிகளில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட குன்னம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 13 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 28 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இவற்றில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 23 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.