தமிழகம்

‘அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி சரியல்ல’ - உயர் நீதிமன்றத்தில் கொறடா தரப்பு வாதம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது சுயவிருப்பத்துடன் தான் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்களா என சட்டப்பேரவைத் தலைவர் எந்த விசாரணையும் நடத்தாமல், அவர்களின் கடிதங்களை ஏற்றுக்கொண்டது சட்டரீதியாக ஏற்புடையதல்ல என அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதையடுத்து அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், மரகதம் குமரவேல், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவரும் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்து வந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி தனது வாதத்தில், “கடந்த மே 13 அன்று சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த இந்த எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்த 30 நிமிடங்களில் தவெக-வில் இணைந்துள்ளனர்.

அவர்கள் தங்களது சுயவிருப்பத்தின்பேரில் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்களா என்பதை பேரவைத் தலைவர் விசாரணை நடத்தி, அதன்பிறகே உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால், அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் பேரவைத் தலைவர், அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது சட்டரீதியாக ஏற்புடையதல்ல. சட்டப்பேரவைச் செயலர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவிலும் அதுதொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாறாக ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ-க்கள் உடனடியாக தவெகவில் இணையப் போகிறார்கள் என்ற தகவல் முன்கூட்டியே பேரவைத் தலைவருக்கு தெரியவந்ததால் தான் அவர் எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் அவர்களது ராஜினாமாவை ஏற்றுள்ளார். பெரும்பான்மை பலத்தை நிரூபி்க்க ஒரு கட்சியின் எம்எல்ஏ-க்களை தங்களது கட்சியில் இணைக்க ஆளுங்கட்சி எடுத்த பகீரத நடவடிக்கையாகவே இதைக் கருத முடியும்.

இது தொடர்பாக பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரது சார்பில் எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக பேரவைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். ஆளுநரைப் போல பேரவைத் தலைவருக்கு எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் பேரவைச் செயலர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை பேரவைத் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவாக ஏற்கக்கூடாது. மேலும், எதன் அடிப்படையில் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டது என்பது தொடர்பாக பேரவைத் தலைவர் தான் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.

அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஆக.17-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT