மதுராந்தகம்: தவெக திமுகவின் 'பி டீம்' அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்காக திமுகவின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டஇயக்கம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றிருந்த நிலையில், எம்எல்ஏக்களை வேறு கட்சிக்கு அழைத்துச் சென்றதால் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இரட்டை இலைச் சின்னத்துக்கும் பழனிசாமியின் ஆட்சிச் சாதனைக்கும்தான் வாக்களித்தனர். தவெக திமுகவின் ‘பி-டீம்’. அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்காக திமுக ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட இயக்கம். திமுகவை கொரோனா என்றால், தவெகவை உருமாறிய கொரோனா எனக் கூறலாம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விலைவாசி, மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழல் தடுப்புச் சோதனைகள், அரசு நிதி செலவினங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை. விஜய் எம்ஜிஆர் பிம்பத்தை பயன்படுத்துகிறார். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுக வழிகாட்டிகள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளுடன் தொடர்கிறோம். இவ்வாறு கூறினார்.