ராஜ் சத்தியன்
மதுரை: “இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்...” என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்தியன், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் நியமனம் முதல் அக்கட்சி வேட்பாளர் பட்டியல் வரை, யாராலும் கணிக்க முடியாது. சிறிய வசதி இல்லாமல் குடிசை வீட்டில் வசித்தவர்கள் கூட, மாவட்டச் செயலாளர், எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் என உயர் பதவிகளுக்கு வந்துள்ளனர். அப்படி இன்று அதிமுகவில் மட்டுமில்லாது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பலரும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை யார், எந்த தொகுதிக்கு வேட்பாளர் என்று கணிக்கவே முடியாது.
மதுரையைச் சேர்ந்த ஆர்பி.உதயகுமார், சாத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாதாரண மாநகராட்சி கவுன்சிலராக இருந்த செல்லூர் ராஜூ அமைச்சராகவும், எளிமையானவர்கள் மாவட்டச் செயலாளராகவும் ஆகியுள்ளனர். தேநீர் கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர், முதல்வர் பதவிகளை அலங்கரித்தார். இதுபோன்ற ஆச்சரியங்களும், எதிர்பாராத வளர்ச்சியும் அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என இளைஞர்கள், பெண்கள் கடந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தனர்.
அதனாலேயே, இந்தியாவிலே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா உயர்த்தினார். ஆனால், இன்று திமுகவை போல் ஒவ்வொரு தொகுதிக்கு யார் யார் வேட்பாளர் என்பதை அதிமுகவில் இறுதி செய்துவிட முடிகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே வேட்பாளராக முடியும் நிலை உள்ளது. வயதானவர்களால் மட்டுமே அதிமுகவின் முக்கிய பதவிகளுக்கு வர முடிகிறது. அவர்களால்தான் கட்சி நடத்த முடிகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டாலும் அவர்களால் கட்சியில் முன்னிலைக்கு வர முடியவில்லை.
உதாரணமாக மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தான், முக்கிய அதிகார மையங்களாக உள்ளனர். இவர்களைத் தாண்டி, அது விவி.ராஜன் செல்லப்பாவின் மகனாக இருந்தால் கூட கட்சியில் முக்கிய இடத்திற்கு வர முடியாது என்பதன் வெளிப்பாடுதான், அவரது மகனும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான ராஜ் சத்தியன் வெளியிட்டுள்ள அறிக்கை.
இதுகுறித்து ராஜ் சத்தியன் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு விவரம் வருமாறு:
அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக
கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம்.
இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்.
மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ் சத்தியன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘‘அவர் கட்சிக்கு எதிராக இந்தப் பதிவை போடவில்லை. உயிரிழந்த கே.எஸ். பூக்கடை மகேந்திரன், கட்சியில் சுறுசுறுப்பாகச் செயல்படக் கூடியவர். அப்பேற்பட்ட தொண்டர் இறந்ததற்கு, கட்சிக்கு எதிராகவும், தவெகவுக்கு ஆதரவாகவும் மூத்த நிர்வாகிகள் செயல்பட்டதுமே முக்கிய காரணம்.
அதிமுகவில் ஐடி-விங்கின் செயல்பாடு சரியில்லை என்று மூத்த நிர்வாகிகள் பலர் கூறுகின்றனர். ஆனால், ஐடி-விங் சார்பில் ஒரு மாவட்டத்தில் கூட்டம் போட வேண்டுமென்றால் கூட அந்த மாவட்டச் செயலாளர் அனுமதியில்லாமல் போட முடியவில்லை. அப்படிப் போட முயன்றால், அது தங்களுடைய வளர்ச்சியை பாதிப்பதாக மூத்த மாவட்டச் செயலாளர்கள் கருதுகின்றனர்.
ஐடி-விங்கின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி மாவட்டங்கள்தோறும் இந்த அணியை மாவட்டச் செயலாளர்களை மீறி வலுப்படுத்த முடியவில்லை. கட்சியின் கிளைச் செயலாளர் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை மூத்தவர்களே பதவிகளை அலங்கரிக்கின்றனர். அவர்களும் ஒற்றுமையாக இருப்பதில்லை.
கட்சி தோல்வியடைந்ததும் மாற்றுகட்சிகளுக்கு தாவுவதும், கட்சிக்கும், பொதுச் செயலாளருக்கும் எதிராகவும் திரும்புகிறார்கள். கட்சி ஒற்றுமையாகவும், வலிமையாகவும் மாற வேண்டும் என்பதே ராஜ் சத்தியன் எண்ணம். அந்த அடிப்படையில் தனது கருத்தை பதிவு செய்துள்ளோம். அவர் எப்போதுமே பொதுச் செயலாளர் கரத்தை, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் துணையாக இருப்பார், ’’ என்றனர்.
மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘பொதுச் செயலாளர் பழனிசாமியால்தான் இன்று கட்சி காப்பாற்றப்பட்டு வருகிறது. அவருக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றி கிடைத்தால் எம்ஜிஆர், ஜெயலலிதாபோல் கட்சியை வலுப்படுத்திவிடுவார். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால், அப்போது தவெக போன்று ஒரு கட்சி வரவில்லை. அதனாலே, எம்ஜிஆருக்கு பிறகும் தொடர்ந்து இரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது.
இளைஞர்கள், பலர் அதிமுகவால் அரசின் உயர் பதவிகளுக்கும், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாற முடிந்தது. தற்போது அதுபோன்ற நிகழ்வுகள், தவெக-வில் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதனாலேயே, தற்போது அதிமுகவில் இருந்து மட்டுமில்லாது திமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்களும், பதவிகள், வளர்ச்சியும் இல்லாத இளைஞர்களும், நிர்வாகிகளும் தவெக-விற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், ஜெயலலிதாபோன்று, தவெக-வில் எளிமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற சொல்ல முடியாது. அதனால், காலம்தான் எல்லாவற்றுக்கும் மருந்து. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பொதுச் செயலாளர் பழனிசாமி, இளைஞர்களை பொறுப்புகளுக்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், ’’ என்றனர்.