‘‘நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தனித்துப் போட்டியிட்டாலும் இம்முறை ஆண்டிபட்டியில் தான் போட்டியிடுவேன்” என ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன். அவர் அதிமுக கூட்டணிக்கு வரவாய்ப்பில்லை என்பதால் அப்போது இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத அதிமுக-வினர், இப்போது தினகரன் அதிமுக கூட்டணிக்குள் வந்தே விட்டதால் அலற ஆரம்பித்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி எம்ஜிஆர் என அதிமுக-வின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி ஆண்டிபட்டி. அதனால் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து அதிமுக-வே போட்டியிட்டு வருகிறது. இந்த நிலையில், இம்முறை ஆண்டிபட்டியில் தானே களமிறங்கும் திட்டத்தில் இருக்கிறார் தினகரன். அதற்காக, கடந்த ஒரு வருடத் துக்கு முன்பாகவே ஆண்டிபட்டியில் அவருக்காக வீடுபிடித்துப் போட்டு வேலை பார்த்து வருகிறார்கள் அமமுக-காரர்கள்.
இதை இத்தனை நாளும் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த அதிமுக-வினர் இப்போது வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “எம்ஜிஆர் காலத்திலிருந்தே ஆண்டிபட்டி அதிமுக-வின் கோட்டை. கடந்த முறை குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் இங்கே தோல்வி அடைந்தோம். இம்முறை வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தொகுதியை தினகரனுக்கு விட்டுக்கொடுத்து விடாமல் அதிமுக-வே இங்கு போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்றனர்.
அதிமுக கூட்டணியில் இருப்பதால் இம்முறை தினகரன் இங்கே போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்ற கணிப்பில் அமமுக-வினர் உற்சாகமாக இருக்கிறார்கள். தினகரன் அல்லது அவரது மனைவி அனுராதா இங்கே போட்டியிடலாம் என்று வரும் செய்திகளை அவ்வளவாக ரசிக்காத அதிமுக-வினர், இத்தனை நாளும் பழனிசாமியை பழித்துக் கொண்டிருந்த தினகரனை ஜெயிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.