‘‘திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விரும்பும் அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும், ’’ என்று அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் களத்தில் இன்று அதிமுகதான் முதலிடத்தில் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை கண்டு ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார். அதிமுகவின் மீது எத்தனையோ குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். கடைசியில் அந்த குழப்பத்தின் மூலம் இன்றைக்கு ஸ்டாலினே கலங்கி போய் உள்ளார். திமுகவை 2026 தேர்தலில் அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் அதிமுக-பாஜக கூட்டணி செயல்படுகிறது.
கடந்த கடந்த 2021 ஆண்டில் முதலமைச்சராக இருந்த பழனிசாமி ரூ. 2500 பொங்கல் பரிசை வழங்கினார். தற்போது ஸ்டாலின் பொங்கல் பரிசை ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இன்றைக்கு கடுமையாக விலைவாசி உயர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வீட்டு வரி, சொத்துவரி ஆகியவற்றையும் உயர்த்தி உள்ளனர். திமுக கூட்டணியில் கலகலப்பு போய் சலசலப்பு தொடங்கிவிவிட்டதால் அக்கூட்டணி வலுவிழக்க தொடங்கிவிட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கருத்துள்ள அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணி பக்கம் வரவேண்டும். திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதிமொழியை எம்.ஜி.ஆர். நினைவுநாளில் அதிமுகவினர் எடுத்துள்ளனர். அதனை நிறைவேற்றும் வரை, இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற முடிவு செய்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.