அதிமுகவில் 17 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள் மற்றும் இதர கட்சிகளுக்கு 6 தொகுதிகள் என மொத்தம் 67 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 23 வேட்பாளர்களும் 2-ம் கட்டமாக 127 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அந்த 150 வேட்பாளர்களில் 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை மற்றும் ஒருசில தொகுதிகள் என மொத்தம் 17 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று 17 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பி.சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு போட்டியிடும் துறைமுகம் தொகுதியில் கட்சியின் அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். மறைந்த பகுஜன் சமாஜ்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திரு.வி.க.நகரில் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி -ஆயிரம் விளக்கு, எஸ்.கோகுல இந்திரா - அண்ணா நகர், விருகை ரவி - விருகம்பாக்கம், தி.நகர் சத்யா - தியாகராயநகர், எம்.கே.அசோக், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மேலும், கே.பி.கந்தன் - சோழிங்கநல்லூர், ஆர்.எஸ்.ராஜேஷ் - ஆர்.கே.நகர், எஸ்.ஆர்.விஜயகுமார்- வில்லிவாக்கம், எஸ்.சரவணன் - ஆலந்தூர், அபிஷேக் ரங்கசாமி - எழும்பூர், என்.முருகுமாறன் - திட்டக்குடி, தன.விமல்- ஆலங்குடி, எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் - திருச்சுழி தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
யார் இந்த சந்தான கிருஷ்ணன்? - சென்னை, திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பி.சந்தானகிருஷ்ணன் (51). ஐடிஐ படித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 2011-16 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் 75-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவரின் ஆதரவாளராக மாறினார்.
தினகரன், அமமுகவை தொடங்கியபோது, மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு 33,277 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்த இவர், கட்சியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக உள்ளார்.
இவர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அங்கு, ராயபுரம் மனோபோட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை பழனிசாமி வழங்கியுள்ளார்.