சேலம் / சென்னை: அதிமுக கூட்டணி, இந்தத் தேர்தலில் 105 தொகுதிகளில் 3-வது இடம் தள்ளப்பட்டு மோசமான பின்னடைவைச் சந்தித்தது.
ஆளும்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உள்பட அமைச்சரவை சகாக்கள் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர். மேலும் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அதிமுகவின் ஆதிராஜாராம் ஆகியோர் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டனர். சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 52,691 வாக்குகள் மட்டுமே பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 81,205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு அமமுக வேட்பாளர் செந்தமிழன் 3-ம் இடம் பிடித்தார்.
அதோல் ஆவடியில் நாசர் 1,04,073 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக வேட்பாளர் ரமேஷ்குமார் 1,80,384 வாக்குகள் பெற்றதுடன் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அங்கு பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரன் 39,605 வாக்குகள் பெற்று, 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் 81,132 வாக்குகள் பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் விஜய் 89,837 வாக்குகள் பெற்றதுடன் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக வேட்பாளர் குமார் 29,473 வாக்குகளை மட்டுமே பெற்று, 3-வது இடத்துக்கு பின்தங்கினார்.
இதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் கே.ஆர்.பெரிய கருப்பன் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அங்கு தவெக வேட்பாளர் சீனிவாசசேதுபதி வெற்றி பெற்றார். ஆனால், பாஜக வேட்பாளர் திருமாறன் 29,054 வாக்குகளுடன் 3-வது இடம் தள்ளப்பட்டார். இதுதவிர அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், காந்தி, அன்பரசன், முத்துசாமி, ராஜேந்திரன், மதிவேந்தன் உள்ளிட்டோரும் தோல்வி அடைந்தனர். இவ்வாறு 105 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 3-வது இடம் தள்ளப்பட்டனர்.