புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன் நிர்வாக ரீதியாக கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியில் நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், காவல் அதிகாரிகள் கடமை தவறியதாகக் கூறி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. இதற்கு எதிராக காவல் அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, சட்டப் பிரிவுகளை விரிவாகச் சுட்டிக்காட்டி தீர்ப்பளித்துள்ளது.
அதில், எஸ்சி. எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவு 4-ன் கீழ் அரசு ஊழியர் மீது கடமை தவறிய குற்றத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டுமென்றால், அதற்கு முன் தகுதியான அதிகாரியால் நடத்தப்படும் நிர்வாக விசாரணை அறிக்கை சட்டப்பூர்வமாகக் கட்டாயமாகும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் நிர்வாக ரீதியிலான விசாரணை ஏதுமின்றி சிறப்பு நீதிமன்றம் நேரடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது தெளிவான சட்டப் பிழை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
திருச்சி மாவட்டம் புத்தா நத்தம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மற்றும் அதன் தொடர்ச்சியான அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.