கோப்புப் படம்
சென்னை: அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் பழவேற்காடு பகுதியில் 90 சோலார் மின் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழவேற்காடு, பசியாவரம் பாலம், எடமணிகுப்பம், எடமணி காலனி, சாத்தாங்குப்பம், சிவன்குப்பம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி குப்பம், காளாஞ்சி ஆகிய கிராமங்களிலுள்ள சாலைகளில் போதிய விளக்குகள் இல்லாத நிலையில், சமூக விரோத செயல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்தனர்.
இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று வரும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை சார்பில் அப்பகுதியில் 90 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீனவ கிராமங்கள் பயன்பெறும்
இந்த சூரியசக்தி மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மணியரசன், காவல் உதவி ஆணையர் தமிழ்வாணன், அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் தலைமை அதிகாரி செரியன் ஆப்ரஹாம் ஆகியோர் பங்கேற்று மின் விளக்குகளை இயக்கி வைத்தனர்.
இதன் மூலம் 5 ஊராட்சிகளை சேர்ந்த மீனவ கிராமங்கள் பயன்பெறும். இத்திட்டம் மீனவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அதானி கட்டுப்பள்ளி துறை முகத்தின் சமூக மேம்பாட்டு துறை மூலமாக கடந்த ஆண்டில் பழவேற்காடு கலங்கரை விளக்கம் பாலத்தில் 32 சோலார் மின் விளக்குகள், 20 மீனவ கிராமங்களில் படகு நிறுத்துமிடத்தில் 20 சோலார் உயர்கோபுர மின் விளக்குகள் என இதுவரை 142 சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.