| படம்: எஸ்.சத்தியசீலன்|
சென்னை: பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை ரேவதி வலியுறுத்தியுள்ளார்.
‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில், ‘பெண்களின் நுாற்றாண்டு என்னிடம் இருந்து தொடங்குகிறது: விழிப்புணர்வில் இருந்து செயல்பாட்டுக்கு’ எனும் தலைப்பில், 6-வது மகளிர் கருத்தரங்கம் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகை ரேவதி, ‘வரசக்தி ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவன இயக்குநர் கல்பனா சங்கர், ‘யெய்ன் உடான்’ நிறுவனர் வேதிகா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேவதி பேசியதாவது: பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து சாதனைகள் படைத்தாலும், பெண்கள் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறோம்.
பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து பேசிக் கொண்டிருப்பதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், விண்வெளி ஆய்வு என பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆனாலும், படித்த குடும்பங்களில்கூட குடும்ப வன்முறைகள் தொடர்வது கவலை அளிக்கிறது.
பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்ணியம் என்பது ஆண்களைவிட பெண்களை உயர்வாகக் கருதுவதோ, ஆண்களை வெறுப்பதோ அல்ல. பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. அதை பெண்கள் நன்கு பயன்படுத்தி, தங்கள் திறமையின் மூலம் முன்னுக்கு வருகின்றனர்.
சமுதாயத்தில் பெண்களின் நிலையை மாற்ற வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மாற்றங்கள் தொடங்க வேண்டும்” என்றார்.