திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி

 
தமிழகம்

“கனிமொழி என்ன தொல்லியல் அலுவலரா?” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி சாடல்

தவெக தலைவர் விஜய் மீதும் கடும் விமர்சனம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: “திருப்பரங்குன்றம் தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று சொல்ல கனிமொழி என்ன மத்திய தொல்லியல் அலுவலரா?” என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத தவெக தலைவர் விஜய் மீது அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தரிசனம் செய்தார். பின்பு மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதான கிராமப் பெண்களை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறியது: “திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் அடியேன்தான். வெற்றிவேல் முருகனுக்கு வீரவேல் முருகனுக்கு மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடப்பதால் மலைக்கு செல்லும் வழியை போலீஸார் திறந்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளாக மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் 1984-ல் தீபம் ஏற்றியுள்ளதாக கைதான பெண்கள் கூறுகின்றனர்.

தீபத்தூணை சர்வே கல் என சொன்ன கனிமொழி என்ன தொல்லியல் துறை அலுவலரா? மலை மேல் தீபமேற்ற மக்கள் சென்றால் கலவரம் வந்துவிடும் என்று சொன்னவர்கள் தற்போது சந்தனக்கூடு விழாவுக்காக அடைத்த பாதையை திறந்துள்ளனர். உங்கள் தர்காவுக்கு வந்து நான் வழிபட தயார், எங்கள் தீபத்தூணுக்கு வந்து நீங்களும் விளக்கேற்றுங்கள்.

திமுக அரசு நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது. தீபம் ஏற்ற 2 பேர் எண்ணெய் வாங்கினால் கூட அரசுக்கு வருமானம்தான்; பாட்டில் வாங்கினால் தான் அரசுக்கு வருமானமா?

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் மொட்டை கோபுரம் கட்டி முடித்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று சொன்னதைப்போல, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டால் திமுக ஆட்சிக்கு கண்டம் என்று யாரும் ஜோசியம் சொல்லியதால் ஏற்ற மறுக்கிறார்களோ எனத் தெரியவில்லை. அதற்காக ஒட்டக பூஜை நடந்ததா எனவும் தெரியவில்லை.

இந்து நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் திமுகவினர், வெங்கடேசன் எம்.பி ஆகியோர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரவேண்டும். முஸ்லிம் சகோதரர்கள் ஆதரவாக இருக்கும்போது இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

திருமாவளவன் சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக முதல்வர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார், நோன்பு கஞ்சி கொடுக்கிறார். நான் அதை தவறு எனச் சொல்லவில்லை. இந்துக்களையும் சகோதரர்களாக கருதவேண்டும்.

பனையூரில் இருக்கும் விஜய், அதை தாண்டி ஈரோடு சென்றார், கிறிஸ்துமஸ் விழாவுக்கு சென்றார். ஆனால் திருப்பரங்குன்றத்துக்கு செல்லவில்லை. தமிழகத்தில் பற்றி எரியும் தீபப் பிரச்சினையை பேசாதது தவறான செயல். கருத்து சொல்லாமல், பேசா மடந்தையாக இருந்தால் உங்களுக்கு பேச விருப்பமில்லை என்று நினைக்கிறதா, பேச தெரியவில்லை என்று நினைக்கிறதா, இரண்டுமே மோசமான நிலைதான்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT