படம்: ர.செல்வமுத்துகுமார்

தமிழகம்

“நாடு முன்னேற மக்கள் அரசியல் செய்ய வேண்டும்” - நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா, கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் மு.அ.முஸ்தபா கமால் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் க.அங்கம்மாள், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கி.ஜெகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சங்கப் புரவலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பேசுகையில், "நமது கல்லூரியின் மிகவும் பழமையான லங்கா கட்டிடம் ரூ.6.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாறியதால் இப்பணியை முடிக்க பொதுப்பணித் துறை சுணக்கம் காட்டி வருகிறது.

எனவே, இன்று நடைபெறவிருந்த அக்கட்டிடத் திறப்பு விழா தள்ளிப்போய் உள்ளது. பேருந்துக்கு காசு கொடுத்து வர முடியாத பொருளாதார நிலையில் இருந்த இக்கல்லூரி மாணவர்கள், இன்று காரில் வருகின்றனர். இந்த மாற்றம் உருவாக காரணமாக இருந்தவர் இக்கல்லூரியை உருவாக்கிய பெரியார்" என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது: “நடிப்பு எனக்கு தொழில். போராட்டம் எனக்கு வாழ்க்கை. சங்கடத்தில் இருக்கும் சக மனிதருக்கு உதவுவது, உடனிருப்பது எனது சுபாவம். நமது முன்னோர்கள் பலர் செய்த தியாகமே, நாம் இப்போது சுகமாக வாழக் காரணம்.

கல்லூரிகள் நமது வாழ்க்கையை செதுக்குகின்றன. இதுபோன்ற விழாக்கள் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெற வேண்டும். நமது நாட்டில் அரசியல் செய்ய வேண்டிய மக்கள், வேலை பார்க்கிறார்கள். மக்களுக்காக வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகள், அரசியல் செய்கின்றனர். இந்த நிலை மாறவும், நாடு முன்னேறவும் நாட்டு மக்களாகிய நாம் அரசியல் செய்ய வேண்டும்” என்றார்.

முன்னதாக முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜலிங்கம் வரவேற்றார். முடிவில், பொருளாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோம. செந்தமிழ்ச்செல்வன், எம்.சுரேஷ் கண்ணா. ராச.காமராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT