அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: நேபாளத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடரில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 95 பேரையும் மீட்க, இந்திய தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், நேபாள விபத்தில் தமிழர்கள் சிக்கியிருப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச முயன்றார். இதுதொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடிதம் கொடுத்திருந்த நிலையில், எம்எல்ஏக்களின் கருத்தை கேட்காமல், அமைச்சர் பதில் அளிப்பது ஏற்புடையதல்ல என திமுக, அதிமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டனர்.
‘அமைச்சர் பேசிய பிறகு, எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்க அனுமதி வழங்கப்படும்’ என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி பேசும்போது, ‘‘நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழர்கள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தகவல் அறிய தொடர்பு எண் ஏதேனும் அறிவிக்கப்பட்டதா? தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி அனுப்பப்பட்டுள்ளாரா? உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சிவஞானமும் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தகவல் வருவது உண்மையா? இதுகுறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்’’ என்றார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தை சேர்ந்த 57 பேர், நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கியிருப்பதாகவும், 37 பேர் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. உடனடியாக சிறப்பு அதிகாரியை அங்கு அனுப்பி தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
சிவகுமார் (பாமக), செல்லசுவாமி (சிபிஎம்), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), போஜராஜன் (பாஜக), தமிமுன் அன்சாரி (மஜக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோரும் தமிழர்களை மீட்க வலியுறுத்தி பேசினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் 384 பயணிகள் காணாமல் போனதாக தகவல் வருகிறது. பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், அரசுத் துறைகளால் தொடர்புகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் சார்பில் கடலூரிலிருந்து 11 பேர், தஞ்சாவூர் - 16, மயிலாடுதுறை - 7, சென்னை-6, கிருஷ்ணகிரி - 5, திருச்சி - 4, திருவாரூர் - 2 தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல்லில் இருந்து தலா ஒருவர் என 54 பேர், புதுச்சேரியிலிருந்து 3 பேர் என மொத்தம் 57 பேர் கைலாசா யாத்திரைக்காக நேபாளம் சென்றனர்.
ரசுவா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், 20 தமிழர்கள் தங்கள் உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு, ஆயுத போலீஸ் படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை காத்மண்டு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 பேர் குறித்த விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
54 பேரையும் விரைந்து தமிழகம் அழைத்துவர இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம். அதேபோல், சென்னையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் அழைத்துச் சென்ற 41 பேர் குறித்த முழு விவரங்களைப் பெற்று வருகிறோம்.
அறிவிக்கப்பட்ட உதவி எண்களில் இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன. அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் நீதிபதி மற்றும் இங்கிருந்து சென்ற தமிழர்கள் மீட்பு தொடர்பாக நேபாள அரசுடன் இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவை இணைந்து கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. நிலைமையை தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.