தமிழகம்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் விஜய் தகவல்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘நேபாள பெருவெள்ள பாதிப்பில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்தப் பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 55 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள்.

SCROLL FOR NEXT