இபிஎஸ்

 
தமிழகம்

ஆதிதிராவிட மாணவர்களின் விடுதி காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஆதிதிராவிட மாணவர் விடுதி காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவர் மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, பணிமாற்றம் செய்யப்பட்டார்.

வயதான தாய், தந்தை, கைக்குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்துக்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு பலமுறை கோரிக்கைவைத்தார். மேலும் விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன்வாங்கியும் செலவு செய்துள்ளார்.

இதனால் தனது குடும்பத்தையும் பராமரிக்க முடியாமல் உள்ள நிலையைச் சுட்டிக்காட்டி, தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கும் பதில் வராததா லும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, 3 நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிரா விடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலத்தில் நிதியை விடுவிக்காத திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். மகேந்திரன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT