டிடிவி தினகரன்
சென்னை: விதிகளை மீறும் அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்துக்கான தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதையும் ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சரின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்?
உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவுக்கு பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது