சென்னை: தைவான் நாட்டு சுற்றுலாப் பயணி உட்பட வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்ற போக்குவரத்து போலீஸார் 6 பேர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அண்ணாநகர் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய, போக்குவரத்து காவலர் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்காமல் இருக்க ரூ.3,500 லஞ்சம் பெற்றுள்ளார். இதை அறிந்த காவல் ஆணையர் அமல்ராஜ், அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
இதேபோல், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸார் 4 பேர், மாம்பலத்தைச் சேர்ந்த ஒருவர் என சென்னையில் மொத்தம் 6 போக்குவரத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண் காவல் ஆய்வாளரும் ஒருவர். இவர்கள் மீது பணியிடை நீக்கம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம், ஆயுதப்படைக்கு மாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அபராதம் விதிக்க தடை
சென்னையில் மடிப்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், மீனம்பாக்கம், மதுரவாயல் உள்பட 8 போக்குவரத்து காவல் நிலையங்களில் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க காவல் ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, தாம்பரம், ஆவடி என காவல் ஆணையரங்கள் பிரிக்கப்பட்டபோது ஒருங்கிணைப்பதில் நிர்வாக சிக்கல் எழுந்தது.
இங்கு வாகன ஓட்டிகள் ஆன்லைன் வாயிலாக அபராதம் செலுத்துவதில் சிக்கல் நீடித்ததால் இந்த தற்காலிகத் தடை உத்தரவை காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.